Thursday, 4 February 2010

தலாய் லாமாவை ஒபாமா சந்தித்துப் பேசுவார்

திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை அதிபர் ஒபாமா சந்தித்துப் பேசுவார். இதில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று அமெரிக்கா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.



தலாய் லாமாவை ஒபாமா சந்தித்துப் பேசக்கூடாது. அப்படி பேசினால் இரு நாடுகளிடையேயான உறவு கடுமையாகப் பாதிக்கும் என சீனா சமீபத்தில் எச்சரித்தது.



இந்நிலையில் சீனாவின் இந்த எச்சரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக அமெரிக்க வெள்ளை மாளிகை தற்போது தெரிவித்துள்ளது. ஆனால் இரு தலைவர்களும் எப்போது சந்தித்துப்பேசுவர் என்பது குறித்து வெள்ளை மாளிகை தரப்பில் எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.



சர்வதேச அளவில் அனைவராலும் மதிக்கப்படக்கூடியத் தலைவர் தலாய் லாமா. இதனால்தான் அவரை ஒபாமா சந்தித்துப் பேசவுள்ளார். சீனாவுக்கு கடந்த ஆண்டு சென்ற போதே புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை தான் சந்தித்துப் பேசவுள்ளதாக ஒபாமா தெரிவித்திருந்தார். சரியான தருணம் கிடைக்காததால் இருவரின் சந்திப்பும் தள்ளிப்போகிறது. எனினும் இருவரும் விரைவில் சந்தித்துப் பேசுவர்.



தலாய் லாமாவை ஒபாமா சந்தித்துப் பேசக்கூடாது என்று கூறியதற்கான காரணம் குறித்து எங்களிடம் சீனா தெளிவுபடுத்திவிட்டது என்று வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவு துணைச் செயலர் பில் பர்ட்டன் தெரிவித்தார்.



சீனாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் திபெத். அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை. ஆனால் திபெத்தில் மனித உரிமை காக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்காவுக்கு அக்கறையுண்டு. திபெத்தின் பாரம்பரியமிக்க, தனித்துவம் வாய்ந்த சமய மற்றும் கலாசாரத்துக்கும் பங்கம் ஏற்படக்கூடாது. அதைக் கட்டிக்காக்க சீனா முன்வர வேண்டும் என்றும் பில் பர்ட்டன் கூறினார்.



தலாய் லாமாவை ஒபாமா சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது, தைவானுக்கு ஆயுதங்கள் விற்பது ஆகிய இருவிவகாரம் குறித்தும் சீனா தெளிவுபடுத்திவிட்டது. எங்களது தேச நலன் பாதிக்காத வகையில்தான் எங்களது எதிர்கால நடவடிக்கையும் அமையும். அதேபோல, சீனாவும் அதன் நலன் பாதிக்காத வகையில் நடந்துகொள்ளலாம். இதில் அமெரிக்காவுக்கு ஆட்சேபனை இல்லை என்று அமெரிக்காவின் பொதுவிவகாரங்களுக்கான வெளியுறவு இணை அமைச்சர் பி.ஜே. குரோவ்லே தெரிவித்தார்.

No comments:

Post a Comment