இந்த நூற்றாண்டில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதை எதிர்காலத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றார் அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா.
ஆசிய நாடுகளான சீனாவும், இந்தியாவும் அனைத்து விதத்திலும் அபார வளர்ச்சி அடைந்து வருகின்றன. எனினும் இவ்விரு ஆசிய நாடுகளோ, ஐரோப்பிய நாடுகளோ அமெரிக்காவைப் பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தைப் பிடிப்பதை நாங்கள் விரும்பவில்லை.ஒபாமா தெரிவித்தார். எங்களுக்கு சொந்தமான முதல் இடத்தை நாங்கள் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வோம் என்றும் அதிபர்
நியூஹாம்ப்ஸ்பியரில் புதன்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் உரைநிகழ்த்தியபோது ஒபாமா இவ்விதம் தெரிவித்தார். அமெரிக்கா முதல் இடத்தை விட்டுக் கொடுக்காது என்று அவர் கூறியதுமே அக்கூட்டத்தில் பலத்த கரவொலி எழும்பியது.
ஒபாமா அதிபர் பதவியில் அமர்ந்ததில் இருந்தே சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை வியந்து பேசிவருகிறார். கடந்த ஒருவாரத்தில் மட்டும் அவர் தனது உரையில் இரு தடவை சீனா, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து வியந்துள்ளார்.
அந்தக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: அமெரிக்காவுக்கும், சீனா, இந்தியாவுக்கும் இடையே ஒரு காலத்தில் அனைத்துவிதத்திலும் பெரிய இடைவெளி இருந்தது. இது சமீபகாலமாக வேகமாகக் குறைந்து வருகிறது. இதை அமெரிக்கர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். குறிப்பாக அறிவியல், கணிதம் போன்ற கல்வித்துறையில் நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். பருவநிலை மாறுபாடு விவகாரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அதிபர் பதவியை பாதுகாப்பான பதவி என்று நினைத்து அதை நான் அடைய விரும்பவில்லை. நாம் ஏராளமான சவால்களை எதிர்நோக்கியுள்ளோம். நம் எதிர்கால சந்ததியினர் முன்னர் அதிகப்படியான பிரச்னைகள் உள்ளன. நமது எதிர்கால சந்ததியினர் நிம்மதியாக வாழ வேண்டுமானால் பிரச்னைகளை களைய நாம் தற்போது கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. அமெரிக்கா எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு தீர்வுகாண வேண்டும் என்ற நோக்கில்தான் அதிபர் பதவி என்ற இலக்கை அடைய விரும்பினேன். எனக்கு அந்த திறமை உண்டு என்று நீங்கள் (மக்கள்) நம்பினீர்கள். இப்போதும் நம்புகிறீர்கள். அதனால்தான் என்னை நீங்கள் அதிபராகத் தேர்ந்தெடுத்தீர்கள்.
எனினும், நான் மட்டுமே தனி ஆளாக நின்று அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்திட முடியாது. உங்கள் அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். கூட்டு நடவடிக்கையால்தான் நாம் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு தீர்வுகாண இயலும். பொருளாதார தேக்க நிலையால் நடுத்தர மக்கள் கடும் கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். அவர்களது கஷ்டம் நீங்கி, நல்வாழ்வு பெற வேண்டும். தொழிலாளர்களுக்கான ஊதியம் மீண்டும் உயர வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சியுற வேண்டும். அவ்வாறு எழுச்சியுறும் பொருளாதாரம் சிலருக்கு மட்டுமே பலனளிப்பதாக இருக்கக்கூடாது. ஒட்டுமொத்த மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். இதையே நான் விரும்புகிறேன். அனைத்துவிதத்திலும் நாட்டை வலுப்படுத்தி முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். இதற்காக அயராது பாடுபடுவேன் என்றார் ஒபாமா.
புதுமைகளை படைப்பதிலும், மாசு இல்லாத பூமியை உருவாக்கும் தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதிலும் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான முதலீடுகள் அதிகரிக்கப்படும் என்றும் ஒபாமா கூறினார்.
No comments:
Post a Comment